கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாவாடைசாமி - சுமதி தம்பதியினரின் மகள் சங்கீதா. இவரைக் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியைச் சேர்நத ஏழுமலை - இந்திராணி ஆகியோரின் மகன் ராஜேஷ் என்பவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனது முதல் ராஜேஷ் வீட்டில் சங்கீதா வாழ்ந்துவந்துள்ளார். திருமணமான இரண்டு மாதங்கள் ராஜேஷ் மற்றும் சங்கீதா சந்தோஷமாக இருந்ததைக் கண்ட ராஜேஷின் தாய், சகோதரி மற்றும் சகோதரன், ராஜேஷ் தங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்ற எண்ணத்தில் சங்கீதாவிடம் தானாக பிரச்னைகளைக் கிளப்பி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் நாற்பதுநாள் கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு பப்பாளி, எள்ளு கொழுக்கட்டை கொடுத்து கருக்கலைப்பும் செய்துள்ளனர்.
இந்நிலையில் சங்கீதாவை மாமியார் இந்திராணி, மற்றும் அவரது மூத்த மகன் அவரது மனைவியுடன் சேர்ந்து கொடுமைப்படுத்தியாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ராஜேஷ் மற்றும் அவரது தாய் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று பணம் வாங்கி வா, நகை வாங்கி வா என்று அடிக்கடி கேட்டு கொடுமைபடுத்தியதோடு சங்கீதாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். சங்கீதாவுடன் ராஜேஷை சேரவிடாமல் தாய் மற்றும் உறவினர்கள் தடுத்துவந்ததாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி சங்கீதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கணவர் ராஜேஷ், “உங்க அப்பாவிடம் பணம், நகை வாங்கி வா... அப்போதுதான் நாம் சேர்நது வாழ்வோம். இல்லையெனில் உனக்கு விவாகரத்து கொடுத்துவிடுவேன்” என்று சங்கீதாவை மிரட்டி வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். பின்னர் இருவீட்டார் தலைமையில் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் சங்கீதாவின் தந்தை கடந்த 2018ஆம் ஆண்டு தனது பெண்ணை வாழ வைக்க வேண்டும் என்று கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.