கடலூர்: ஊதியம் வழங்காததைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நாளை (செப். 01) முதல் மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் கடலூர் மண்டலத்தில், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பிரிவினர் என சுமார் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 31ஆம் தேதி ஊதியம் வழங்கி வந்த நிலையில், இந்த மாதத்திற்கான ஊதியத்தை வழங்க போதுமான நிதி இல்லை என காரணம் காட்டி மண்டல மேலாளர் 5ஆம் தேதிக்கு மேல் ஊதியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.