தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சியினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.
மேலும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காலை முதலே 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து பேரணி தொடங்கிய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் .
அதன் பின்னர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தடையை மீறி பேரணியாகச் சென்றனர். கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை வழியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றது.
ஆனால் பேரணியாக சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனையடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரிப் படுகை விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் , ”தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே உடனடியாக மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்தத் திட்டத்தை ரத்து செய்யும்வரை தொடர்ச்சியாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.