சமூக வலைதளத்தில் பள்ளி மாணவிகளுக்கு வலைவிரித்த காதல் ரோமியோ! - பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது
கடலூர்: சிதம்பரத்தில் சமூக வலைதளம் வாயிலாக பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறி இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பெரிய வட வாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (19). இவர் பொறியியல் படித்துவருகிறார்.
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் ஜெயக்குமார் சிதம்பரம் பள்ளி படையைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டு நண்பராகப் பழகி உள்ளார்.
பின்பு தான் வசதியுள்ள பையன் என்றும் பொறியியல் படிக்கும் மாணவன் என்றும் காதல் வலைவீசி உள்ளார். இதில் அந்த மாணவி மயங்கி உள்ளார்.
இதனையடுத்து பள்ளி மாணவி தாய் இல்லாத நேரமாகப் பார்த்து ஜெயக்குமாரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அந்த மாணவியின் தாய் வீட்டிற்கு திடீரென வந்த நிலையில், ஜெயக்குமார் ஓடிச்சென்று கழிவறையில் ஒளிந்துகொண்டார்.
இதில் சந்தேகம் அடைந்த அம்மாணவியின் தாய் சிதம்பரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் கழிவறையில் மறைந்திருந்த ஜெயக்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து ஜெயக்குமாரின் செல்போனை காவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் பல மாணவிகளுடன் படுக்கையறையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாண்டி செல்வி ஜெயக்குமார் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரை மீட்க விருத்தாசலத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
அதற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் காவல் நிலைய வாசலில் வைத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.