கடலூர்:பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில், கடலூர் திமுக எம்பி ரமேஷிற்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கே கோவிந்தராஜ் என்ற தொழிலாளி 15 வருடங்களாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரை எம்.பி.யும், அவரது ஆள்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே பாமக பிரமுகரான வழக்கறிஞர் கே பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் உடலை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தனர்.
கோவிந்தாராஜின் மர்மமான மரணத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சிபிசிஐடி கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி விசாரணை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, கோமதி தலைமையில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு ஆய்வாளர் கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணை
இதில் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை காவல் ஆய்வாளரும், காடம்புலியூர் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளருமான நந்தகுமார், சம்பவம் நடந்த மறுநாள், அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி அன்று காலை, திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சில தொழிலாளிகளிடம் விசாரணை செய்தபோது கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்து கொடுமை செய்தார்கள் என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய வழக்குகள் குறித்த விபரங்கள் அடங்கிய டைரி, சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த இரவில் கோவிந்தராஜை காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கோவிந்தராஜை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றை சேகரித்துக் கொண்ட கடலூர் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவர்களின் ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் ஊழியர்களான நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகிய ஐந்து பேரை கொலை வழக்கில் கைது செய்து, கடலூர்ர சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அப்போது நடராஜன் என்பவருக்கு மயக்கம் ஏற்பபட்டுள்ளது.
உடனே அவரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ததனர். மீதமுள்ள நான்கு பேரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். மேலும் திமுக எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து தொழிலாளி கோவிந்தராசுவை கடத்திச் சென்று அடைத்து வைத்தல் (இ.த.ச. 341), கொலை (இ.த.ச. 302), வன்முறையை பிரயோகித்தல் (இ.த.ச. 147), குற்றம் செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடுதல் (இ.த.ச. 149) ஆகியவற்றுடன் கூட்டுச்சதி (இ.த.ச. 120 பி), சாட்சியங்களை அழித்தல் (இ.த.ச. 201) ஆகிய பிரிவுகளில் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா ஆஜர்!