தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்வையிடும் பொருட்டு கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அழகிய நத்தம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து சுய தொழில் தொடங்க இரண்டு சுய உதவிக் குழுக்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது, "மகளிர் குழுவினரின் செயல்பாடுகள், வங்கி கடன் பெறுதல், உற்பத்தி பொருள்கள் விற்பனை மேற்கொள்ளுதல், சந்தை வாய்ப்புகள், சமுதாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுதல் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை வலுவான அமைப்பாக செயல்படுத்தி நீங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும்.
அரசு சார்பில் பெறப்பட்டநிதிகள், வங்கியில் இருந்து பெறப்பட்ட நேரடி கடன் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெற்ற பெரும் கடன் ஆகியவை முறையாக திரும்ப செலுத்தி மீண்டும் கடன் பெற்று தொழில் செய்யலாம்.
மகளிர் குழுவினருக்குத் தேவையான பயிற்சி விவரங்கள், தொழில் தொடங்க வாய்ப்புகள் பிற உதவிகள், தேவையானவற்றை செய்து தருவதற்காக மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கும் தொழில் வாய்ப்புகளுக்கும் அனுமதி பெறாத நிதி நிறுவனங்களிடமிருந்து , தனிநபர்களிடம் கந்துவட்டிக்கு பணம் பெறாமல் வங்கியில் நேரடியாக கடன் பெற்று பயனடைய மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக தொழில் செய்ய வேண்டும்.
சுய தொழில் செய்வதன் மூலம் தங்கள் குடும்பமும் வருமானம் பெறும், தாங்கள் சார்ந்துள்ள குழுவுக்கும் வருமானம் கிடைக்கும். நீங்கள் இன்னும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்" என்றார்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க தகுந்த இடைவெளியுடன் மகளிர் குழுவினரின் கூட்டங்களை நடத்திடவும், அவர்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கடலூர் மகளிர் திட்ட இணை இயக்குநர் பூ. காஞ்சனா, உதவி திட்ட அலுவலர்கள் விஜயகுமார், ராஜ்குமார், வட்டார இயக்க மேலாளர் ராஜ்குமார், ஊரகவளர்ச்சி துறை பிற அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.