கடலூர்:வடலூரைச் சேர்ந்த சுடர்விழி (37) என்பவர், தனது சகோதரி சுதாவின் வீட்டுக்காரரான புதுச்சத்திரம் பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதனிடம், தன்னிடம் ஒரு குழந்தை இருப்பதாகவும், அதற்குப் பிறப்புச் சான்றிதழ் வேண்டும் எனக் கூறியுள்ளார். விஸ்வநாதன் அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து குழந்தையை வைத்திருப்பது ஆபத்து என எண்ணி, அதைத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
பின்னர் விஸ்வநாதன் கடலூர் ஆட்சியர் அலுவலகம் சென்று, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் குழந்தையைத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பது குறித்து விசாரித்துள்ளார். அப்போது விஸ்வநாதன் முன்னுக்கு பின் முரணாகத் தகவல் தெரிவித்ததில் சந்தேகமடைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
அதன்படி போலீசார் விஸ்வநாதன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தனது மனைவியின் தங்கை வடலூரை சேர்ந்த சுடர்விழியிடம் குழந்தை உள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பிறகு வடலூர் சென்ற போலீசார் சுடர்விழியிடம் விசாரணை நடத்தியதில், அவர் கடந்த டிசம்பர் மாதம் வடலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன் நிஷாவிடம், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த குழந்தையை வாங்கியதாக கூறியுள்ளார்.