கடலூர்: சிதம்பரம் அருகே வேலகுடி பகுதியில் பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது. இது கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வரும் பகுதியாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள பாலத்தின் மீது சென்னை நோக்கி சென்ற மண்ணை மற்றும் அந்தோதயா அதிவிரைவு ரயில் ஓட்டுநர்கள் பழைய கொள்ளிடம் ஆற்றின் மீது உள்ள மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தில் ஏதோ அடிபட்டு இறந்து கிடப்பதாகச் சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு சென்று ரயில்வே போலீசார் பார்த்தபோது சுமார் 200 கிலோ எடையும் 6 அடி நீளமும் கொண்ட முதலை தண்டவாளத்தில் தலை, கால் துண்டாகி இறந்து கிடந்தது.
பின்னர் முதலையின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் வல்லம்படுகையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவு... கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்...