கடலூர் :திட்டக்குடி வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். விவசாயியான இவருக்கு அதே ஊரை சேர்ந்த ஐயம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்டம் ரோஸ்நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அந்த ஊரில் உள்ள பலருக்கும் ரவிச்சந்திரன் நன்கு தெரிந்தவர் எனக் கூறப்படும் நிலையில், அனைவரிடமும், தான் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. பொது மக்கள் பலரிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வருவதாகவும், அந்த தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் ரவிச்சந்திரன் ஆசை வார்த்தை கூறி வந்ததாக கூறப்படுகிற்து.
மேலும், தான் பணியாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்ய மேலும் பணம் தேவைப்படுவதாகவும், நீங்கள் முதலீடு செய்தால், அந்த பணத்தை 6 மாதத்தில் இரட்டிப்பாக தருவேன் என்று ரவிச்சந்திரன் கூறியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இரட்டிப்பாக தரும் போது, அவருக்கு 10 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதை நம்பி சுந்தர்ராஜன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ராமநத்தத்தில் வைத்து ரவிச்சந்திரன், அவரது மனைவி கற்பகம் (வயது 47) ஆகிய 2 பேரிடமும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் மொத்தம் 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ராமநத்தம் ஐயம்பெருமாளிடம் ரூ.10 லட்சம், தச்சூரை சேர்ந்த சீதாராமனிடம் ரூ.20 லட்சத்து 37 ஆயிரத்து 900, ராமநத்தம் ராஜூ கண்ணனிடம் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்து 37 ஆயிரத்து 900 பணத்தை ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் 6 மாதம் கடந்த போதும் பணத்தை தராமல் ரவிச்சந்திரன் தம்பதி இழுத்தடித்து வந்ததாகவும், பின்னாட்களில் தம்பதியினர் நம்பிக்கை மோசடி செய்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.