TNPSC Group 4 Result: ஒரே மையத்தில் 2000 பேர் தேர்ச்சி சர்ச்சை; அகாடமி நிறுவனர் விளக்கம்! கடலூர்:தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) கடந்தாண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடந்திய குரூப்-4 (Group 4) தேர்வு முடிவுகளை கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட தேர்வு என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அனைத்து சாதியினருக்கும் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.
அதற்கு ஏற்றார் போல் தேர்வு அறிவிப்பின் போது வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களை விட கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஆண்டுக்கு 10 ஆயிரம் பணியிடங்கள் எனக் கணக்கிட்டு 30 ஆயிரம் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என தேர்வர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் இருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்ட இந்த தகவலால் தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் சட்டமன்றம் வரை சென்ற நிலையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சம்பந்தப்பட்ட தனியார் மையத்தின் நிறுவனர் ஆகாஷ் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 52 கிளைகளை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான குரூப் - 4 தேர்வு முடிவில், ஒரே மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. அதாவது ஒரு மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் தேர்வாகவில்லை.
தமிழ்நாடு முழுவதும் ஒரே பெயரில் உள்ள 52 மையங்களில் படித்த 2 ஆயிரம் பேர் தான் தேர்ச்சி பெற்றனர். இதில் எனது மையத்தில் படித்த விருத்தாசலம் மாணவன், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளான். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தவறான செய்தி, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது உள்ள போட்டி காரணமாக இப்படிப்பட்ட தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
மேலும், எங்கள் மையத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. இது தொடர்பாக எப்போது கேள்வி கேட்டாலும், நான் பதில் அளிக்க தயாராக உள்ளேன். இந்நிலையில் எனது மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் மாணவர்களின் பெயர் பட்டியலும் என்னிடம் தயாராக உள்ளது. அதிகாரிகள் கேட்டால், அந்த பட்டியலை ஒப்படைப்பேன்" என அகாடமி நிறுவனர் உறுதியுடன் கூறினார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி வாங்கிய 4 சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு: உயர் நீதிமன்றக்கிளை