கடலூர்பேருந்து நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, வடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று (நவ. 30) மாலை தனியார் பேருந்து ஒன்று விருத்தாச்சலம் செல்வதற்காக தயார் நிலையில் இருந்துள்ளது.
அப்போது தனியார் பேருந்தின் நடத்துனர், விருத்தாச்சலம் பகுதிக்கு மட்டும் பயணிகள் ஏற வேண்டும் எனக் கூறிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குறிஞ்சிப்பாடிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஏறுவதற்கு முயன்ற போது, நடத்துனர் தகாத முறையில் நடந்தும், தகாத வார்த்தையிலும் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
விருத்தாச்சலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி என்ற இடத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், ஏன் குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிற்காது? என பயணிகள் நடத்துனரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.