கடலூர்: சேலம் மெய்யனூர் கிளையைச் சேர்ந்த TN-30-N2139 என்ற அரசு பேருந்தில், ஓட்டுநராக சத்தியமூர்த்தியும், நடத்துநராக நேரு என்பவரும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு நேற்று (நவ.16) காலை 5.55 மணியளவில் சேலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் வரை செல்ல பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
எனவே, இந்த பேருந்து 9:30 மணி அளவில் நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம் என்ற இடத்தில் வந்த பொழுது, விழுப்புரம் போக்குவரத்துக் கழக கடலூர் மண்டல உதவி மேலாளர் தலைமையிலான டிக்கெட் பரிசோதகர்கள் குழு, திடீரென பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர்.
அப்போது, பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாக இருந்துள்ளது. இதையடுத்து அனைத்து டிக்கெட்டுகளையும் சோதனை செய்ததில், ஏற்கனவே விற்பனை செய்த பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் இருந்து பெற்று, புதிய பயணிகளுக்கு பழைய டிக்கெட்டுகளை நடத்துநர் கொடுத்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரிசோதகர்கள் குழு, இதுகுறித்து நடத்துநரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் திரு திருவென முழித்தபடி நின்றுள்ளார். இதையடுத்து, நடத்துநரிடமும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில், நடத்துநர் தனது பாக்கெட்டில் இரண்டு கட்டு பழைய டிக்கெட்டை வைத்துக் கொண்டு, பயணிகளுக்கு அதை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பேருந்திலேயே பயணிகளுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் நடத்துநரைக் கண்டித்தனர். அதுமட்டுமன்றி, சேலத்தில் இருந்து பயணித்த இரு பயணிகளுக்கு 100 ரூபாய் டிக்கெட்டுக்கு பதில், 10 ரூபாய் டிக்கெட் இரண்டை வழங்கியதாகவும் பயணிகள் சிலர் குற்றம் சாட்டினர்.