தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் தட்டுபாடு இல்லை என, பொய் அறிக்கை விடும் ஆட்சியர்! மக்கள் ஆவேசம்..!

கடலூர்: குடிநீர் தட்டுப்பாடு இல்லை எனக் கூறும், மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர்

By

Published : Jun 27, 2019, 10:22 PM IST

தமிழ்நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் அதற்குத் தப்பாத கடலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் திட்டக்குடி தாலுகாவில், குடிநீர் கேட்டு நாள்தோறும், பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை, கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அறவே இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 34 கோடி ரூபாய் செலவில், 700க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாகப் பொதுமக்களுக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெண்கள் தனியார் கொண்டு வரக்கூடிய குடிநீரைக் காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் சிக்கித் தவிப்பதாகவும், கிராமப் பகுதி பெண்கள் கூலி வேலைக்குச் செல்ல முடியாமல், பிள்ளைகள் கல்வி பயிலப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், குடிநீர் தேடி காலி பாத்திரங்களுடன், பல கிமீ தூரம் அலைந்து திரிந்து நீரை எடுத்து வருவதாகச் சொல்லும் இவர்கள், அன்றாட அத்தியாவசிய தேவைக்கான நீரை, விளைநிலங்களில் பயிர்களுக்குப் பாய்ச்சும் நீரைப் பிடித்து வரக்கூடிய சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இதையெல்லாம் அறியாத மாவட்ட ஆட்சியர், ஆளும் அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது, என சமூக நல ஆர்வலர்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details