நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் - தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
கடலூர்: தீபாவளிக்கு முன் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலர்களிடம், பிஎஃப் பணத்திலிருந்து தீபாவளி முன் பணம் வழங்க வேண்டும். ரூ.2 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுவரை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தூய்மைப் பணியாளர் சங்க தலைவர் அரசகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஆலோசகர் பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை நிர்வாகிகள் நாகப்பன், மணி, ஆனந்த் மற்றும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த மேலாளர் பழனியிடம் கோரிக்கை குறித்து முறையிட்டனர். அப்பொழுது அவர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.