கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 84ஆவது பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகங்களில் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
இதில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் தங்கப்பதக்கம் பெற்ற ஆயிரத்து 235 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். மேலும் நேரடியாகவும், தொலைதூர கல்வி வாயிலாகவும் படித்த ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 701 பேர்களுக்கு பட்டங்களை வழங்கி தலைமை உரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் மருத்துவர் கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கல்வித்துறை அமைச்சர்கள் வரவில்லை: நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மருத்துவர் சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் பட்டமளிப்பு விழாவில் பங்கு கொள்ளவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய திமுக அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதால் தான் திமுக அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: 'திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்'