தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நானும், நடராஜரும்... இடையில் நாரதர்கள் வேண்டாமே...'- தமிழிசை செளந்தரராஜன் - நானும் நடராஜரும் இடையில் நாரதர்கள் வேண்டாமே

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவமானப்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு அவரது முகநூலில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

”நானும், நடராஜரும் இடையில் நாரதர்கள் வேண்டாமே”- தமிழிசை செளந்தரராஜன்
”நானும், நடராஜரும் இடையில் நாரதர்கள் வேண்டாமே”- தமிழிசை செளந்தரராஜன்

By

Published : Jul 7, 2022, 9:52 AM IST

கடலூர்:உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆணி திருமஞ்சன விழா நேற்று (ஜூலை 6) விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் இருந்து ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும் சிவகாமி சுந்தரி அம்பாளுக்கும் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காலை 5 மணியளவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்து புதுச்சேரி சென்றார். இந்நிலையில், ஆளுநர் தமிழிசையை நடராஜர் ஆலயத்தில் தீட்சதர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக பொதுமக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு சென்று வந்தால் இதுபோன்று அவ்வப்போது புரளிகள் வருவது வழக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அதிகாலையில் இருந்து நடந்த சம்பவத்தை விளக்கமாக பதிவிட்டுள்ளார்.

தமிழிசையின் முகநூல் பதிவு: “சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் தரிசனத்திற்கு சென்றபோது நடந்த சுவையான சம்பவம். இன்று (நேற்று ஜூலை 06) அதிகாலை 5 மணிக்கு சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன்.

திருக்கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோயிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் பொதுமக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

இறைவனுக்கு நடைபெற்ற ஒவ்வொரு அபிஷேகத்திற்கு பின்பு இறைவனின் சந்தனம், மாலை போன்றவற்றை அளித்தார்கள். நானும் என்னருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை.

தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். நான் அதற்கு அபிஷேகம் எனக்கு நன்றாக தெரிகிறது நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன். அதற்கு பின்பு அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

லட்டு காகிதத்தில் தமிழிசை படம்:சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அப்போது தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்தார். லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம் இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது, இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர் கூறினார் லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாள்.

தீட்சிதரிடம் பிரசாதம் பெறும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

அப்போது தீட்சிதர் என்னிடம் கூறினார், கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு காகிதம் கொடுங்கள் என்று மற்றொரு தீட்சிதரிடம் கேட்டேன் அவர் கொடுத்த காகிதத்தில் உங்கள் படம் இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு உங்களுக்கு தருகிறேன். இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது என்றார்.

இது ஒரு சுவையான அனுபவம்:காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் இறைவனை தரிசனம் செய்துவிட்டு இறை அருளோடு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புரந்தள்ளுகிறேன்.

சுவையான சம்பவங்களை நான் மனதில் எடுத்துக்கொள்வதும் நேர்மறையான சிந்தனைகளையே ஏற்றுக்கொளளும் மனப்பக்குவத்தை இறைவன் எனக்கு தந்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு மற்றவர்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாநிலங்களவையில் ஒலிக்கவுள்ள இளையராஜாவின் குரல்.. தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details