கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-15 என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (30). இவர் என்எல்சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலாகப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த மந்தாரக்குப்பம் ஒம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பெங்களூர் மணி, என்எல்சி சுரங்கப் பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது செல்வேந்திரன் அவரைப் பிடிக்க முயற்சித்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாதுகாப்பு வீரரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவத்தின்போது அருகிலிருந்தவர்கள் எடுத்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் காணொலி இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு வந்த மந்தாரக்குப்பம் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய பெங்களூர் மணி மீது மந்தாரக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கஞ்சா உள்ளிட்ட திருட்டு வழக்குகளும், சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கிழ் கைது செய்து மூன்று மாதங்களில் வெளியே வந்த அவன் தற்போது ஜாமீனில் வந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 9 காட்டு முயல்களைக் கடத்த முயற்சி: ஒருவர் கைது!