கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன் இன்று காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிதம்பரம் வந்தார். அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.
ஒன்றிய அரசின் வறட்டு பிடிவாதத்தால், சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மோடி அரசின் அணுகுமுறை தான் இதற்கு காரணம். அந்த வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
பிராந்தியத்தின் பெயரால் பிரிவினை
கொங்கு நாட்டைப் பிரிப்பது என்ற கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. மதம், ஜாதி பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உத்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உத்திகளை செய்து வருகிறது.