சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா கடலூர்: உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ர தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் என இரு முக்கிய திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. அதன்படி மார்கழி ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு இன்று பொற்கூரை முன்பு உள்ள கொடிமரத்தில், பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தும், தீபாராதனைகள் காண்பிப்பதும் கோயில் பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர்.
பின்னர் கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 10 நாட்களுக்கு சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புப் பணியை பொறுத்தவரையில் சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி வியாழக்கிழமை, பிரசித்திபெற்ற தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த தேரானது நான்கு ரத வீதிகளில், வீதி உலா முடிந்த பின்பு அதன் நிலைக்கு வந்தடையும். பின்பு இரவு 8 மணிக்கு ஆயிரம்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். மறுநாள்(ஜன.6) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு, காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ர தரிசனமும் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது. குறிப்பாக மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்த ஆருத்ர தரிசன விழாவானது, நடராஜர் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:திருவெம்பாவை உற்சவம்: தங்க தேர் புறப்பாடு ரத்து