கடலூர்:பண்ருட்டி அருகே பட்டம்பாக்கம் என்ற இடத்தில் இன்று காலை 10 மணி அளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர (Bus Accident in Cuddalore) விபத்துக்குள்ளானது. கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சுகம் என்ற பேருந்து பண்ருட்டி நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேபோல, பண்ருட்டியில் இருந்து துர்கா என்ற தனியார் பேருந்து அதிவேகமாக அவ்வழியாக வந்துள்ளது.
இந்த நிலையில், பட்டாம்பாக்கம் அருகில் வந்த துர்கா என்ற பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால், அதி வேகத்துடன் வந்த அப்பேருந்து, எதிர்பாராத விதமாக அதன் வலதுபுறத்தில் இழுத்துச் செல்லப்பட்டு எதிரே கடலூரில் இருந்து வந்த பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதிகள் மிக கோரமாக நசுங்கியதில், சுகம் பேருந்து ஓட்டுனர் முருகன், துர்கா பேருந்து ஓட்டுனர் அங்காள மணி, பேருந்தில் பயணம் செய்த தனபால் சீனிவாசன் ஆகியோர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில், 80 பேர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், படுகாயமடைந்தவர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நல அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த பயங்கரமாக விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், படுகாயமடைந்தவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நல அமைச்சர் சி.வி.கணேசன் அகியோர் அங்கு சென்று பார்வையிட்டு அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.