கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் வட்டம் குறுங்குடி கிராமத்தின் அருகேயுள்ள இடைநாறூர் என்ற பகுதியில், பட்டாசு உற்பத்தி குடிசை தொழிலாக நடைபெற்றுவருகின்றது. சின்னத்துரை என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில், அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட பலர் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(செப்.4) பட்டாசு உற்பத்திக்குத் தேவையான வெடிபொருள்களை கையாளும்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி பலியாகினர். இவ்விபத்தில் ஆலையின் கட்டடம் தரைமட்டமானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை, மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வெடி விபத்தில் தரைமட்டமான கட்டடம் வெடி விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது, அவர்களும் வழியிலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 9 பேரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசு விபத்தில் 9 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.