கரோனா வைரஸ் காரணமாக 40 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகள் நேற்று முன்தினம்(மே 7) திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (மே 8) மாலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுபானம் திருட முயன்ற இளைஞர்: பொதுமக்களை கண்டு தப்பியோட்டம்
கோயம்புத்தூர்: டாஸ்மாக் கடையின் ஓட்டைப் பிரித்து மது திருட முயன்ற இளைஞர் பொதுமக்களை கண்டு தப்பியோடினார்.
இதனையடுத்து இன்று (மே 9) காலை மதுபானக் கடைகள் எதும் திறக்கப்படாது என டாஸ்மாக நிர்வாகம் அறிவித்ததால் மது பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையில் கோயம்புத்தூர் செல்வபுரம் சாலை செட்டி வீதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் (1672) மேற்புறத்தில் உள்ள ஓடுகளை இளைஞர் ஒருவர் பிரித்துக் கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் பார்த்து பெரிய கடை வீதி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள் பார்ப்பதைக் கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை உதவி ஆணையர் ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் மதுபானக் கடையில் உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரியவந்தது. மேலும் மது பாட்டில்கள் திருட வந்த நபர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.