கோயம்புத்தூர்: அன்னூரில் சத்தி சாலை அருகே ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு (ஜூலை 30) கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
அந்த ஷவர்மாவை ஆண்ட்ரூஸ் உண்ணும் போது அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆண்ட்ரூஸ்க்கு ஆதரவாக சிலர் திரண்டு அந்த ஷவர்மா உணவகத்தை முற்றுகையிட்டனர்.
ஷவர்மா சாப்பிட்டவருக்கு வாந்தி இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சம்பவம் குறித்து புகார் அளித்தால் விசாரிப்பதாக கூறினர். இதனையடுத்து ஆண்ட்ரூஸ் அன்னூர் காவல் துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக ஆண்ட்ரூஸ் சாப்பிட்ட உணவை வாங்கிய காவல் துறையினர், சோதனைக்காக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர். உணவின் தரம் குறித்த முடிவுகள் வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை: ஒருவர் கைது