கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை சேர்ந்த தன்னார்வலர் முத்துச்செல்வன். இவர் நதிகளை இணைக்கக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மூன்று வருடங்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் 1,111 நாட்கள் 34 மாநிலங்கள், 733 மாவட்டங்கள் வழியாக சைக்கிளில் பயணம் செய்யவுள்ளார்.
அப்போது துண்டு பிரசுரங்கள் வழங்கி நதி நீர் இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார். இதுகுறித்து இளைஞர் முத்துச்செல்வன் கூறுகையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய அரசு, இந்தியாவில் நதி நீர் இணைப்பு குறித்து மாநிலங்களுக்கு வலியுறுத்தி இருந்தது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தற்போது நான் சாதாரண சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். விவசாயம் மட்டுமே பிரதானமாக உள்ளது நாட்டில் நதிநீர் இணைப்பு மிக முக்கியமானது” என தெரிவித்தார்.