கோயம்புத்தூர்: ரத்தினபுரி ரங்கண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் ரத்தினபுரி 7ஆவது வீதியில் பரிசுப் பொருள்கள் விற்கும் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் (பிப்ரவரி 11) இவரது மனைவி செல்வராணி கடையில் இருந்தபோது கடைக்கு வந்த ஒரு பெண் தனக்கு வேண்டிய சில பொருள்களை எடுத்து மேஜையில் வைத்து. அவற்றை பரிசுத் தாளில் பேக்கிங் செய்து தருமாறு கூறியுள்ளார்.
செல்வராணி அந்தப் பொருள்களைப் பேக்கிங் செய்யும்போது திடீரென கடைக்கு வந்த பெண், செல்வராணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். உடனடியாக அவர் சத்தம் போடவே, செல்வராணி முகத்தில் பூச்சிகொல்லி மருந்தை (கிட்) அடித்துள்ளார்.
எனினும் செல்வராணி விடாப்பிடியுடன் அந்தப் பெண்ணுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் எட்டு சவரன் தங்கச் சங்கிலியுடன் வெளியே தப்பி ஓடினார்.
நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் செல்வராணி அவரைத் துரத்திக்கொண்டு சத்தம் போட்டுக்கொண்டே பின்னால் ஓடினார். இதனையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அந்தப் பெண்ணை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து, ரத்தினபுரி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுரை, மேலூர் அருகேவுள்ள ஆட்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த சரவண ரவி என்பவரது மனைவி தவமணி என்ற தெய்வாநதி என்பது தெரியவந்தது.
நகை பறிக்கும் சிசிடிவி காட்சி தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு பவுன் தங்கச் சங்கிலியை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், விசாரணையில் தவமணி மீது திருப்பூரில் இதேபோல கொள்ளை வழக்கு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் செல்வராணியின் நகையைப் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:ரூ.5 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கம் சிக்கியது - தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை