கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தமுள்ள இரண்டு லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்களில், இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 380 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். அதில் 79.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 75.60 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 3.81 விழுக்காடு வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. சூலூர் தொகுதி வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பேட் ஆகியவை சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான கோவை - தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.