விவசாயிகள் தோட்டத்தில் புகும் காட்டுப் பன்றிகளை கொலை செய்ய அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடியை பயன்படுத்துவது வழக்கம். மேலும் பன்றி இறைச்சிக்காகவும் இந்த நாட்டு வெடியை பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. பன்றிக்காக வைக்கப்படும் இந்த நாட்டு வெடியை தவறுதலாக கால்நடைகளும், யானைகளும் உட்கொள்ளும் போது அவற்றிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அவை உயிரிழக்க காரணமாக அமைகிறது.
இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ச்சியாக இந்த நாட்டுவெடியை வெளியே சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் பகுதியில் நாட்டு வெடியை கடித்த காட்டு பன்றி ஒன்று வாய் சிதறி உயிருக்கு ஆபத்தான நிவையில் ஊருக்குள் சுற்றி வந்தது.
வாய் கிழிந்த நிலையில் இரத்த காயங்களுட்ன் சுற்றி திரிந்த காட்டு பன்றியை கண்ட பொது மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் பன்றியை மீட்டு நரசிபுரம் கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி காட்டுப்பன்றி பரிதாபமாக உயிரிழந்தது.