எல்லைகளின் வரையறைகளைத் தெரிந்து கொள்ளாத வனவிலங்குகள், கானகத்திலிருந்து நகரத்திற்குள் நுழைவதால், பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தன. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு, விலங்குகளுக்கு சுதந்திர காலமாக அமைந்திருக்கிறது. மனிதனின் ஆக்கிரமிப்பு இல்லாத, சாலை அவற்றிற்கு கொண்டாட்டத்தை அளிக்கிறது. மனிதர்களை முடக்கிய ஊரடங்கு, இயற்கையை மீட்டெடுத்துள்ளது.
இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், "கோவிட் 19 என்ற தீ நுண்மி, மனிதர்களை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. இந்தத் துயர் மிகுந்த நாள்களில், சில மகிழ்ச்சியான செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுகின்றன. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் வனவிலங்குகள் பதற்றமின்றி வந்துபோகின்றன.
ஒரு காலத்தில் பூமியின் பெரும்பகுதி காடுகளாகவும், வன உயிர்களின் வாழ்விடமாகவும் இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, வளர்ச்சி என்ற பெயரில் அதன் வாழ்விடங்களை, மனிதர்களாகிய நாம் ஆக்கிரமித்துள்ளோம். இதனால் வனவிலங்குகளின் வாழ்விடம் சுருங்கியுள்ளது. அவ்வாறு சுருங்கிய வாழ்விடத்திலும், சாலைகள் அமைத்து இரவு பகலாக வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தியிருக்கும்" என வளர்ச்சியினால் ஏற்பட்ட வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து மனிதர்களுக்குத்தான் வளர்ச்சி, வன உயிரினங்களுக்கு இடையூறு என விவரிக்கும் காளிதாஸ், அவற்றின் விளைவுகளையும் எடுத்துரைக்கிறார். அவர் கூறுகையில், "போக்குவரத்தினால் பல இடங்களில் பகலில் நடமாடக் கூடிய விலங்குகள், இரவில் மட்டுமே நடமாடக் கூடிய விலங்குகளாக மாறியுள்ளன. முதுமலையிலிருந்து பந்திப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அந்தக் காட்டு விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு, இரவு நேர போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அவற்றை இன்று பலர் எதிர்த்து வருகின்றனர்.
”இந்த உலகத்தை மனிதர்களுடைய உலகமாக மட்டும் எண்ணி பார்ப்பதே, சூழலியல் பிரச்னைக்கு காரணம்”