கோவை:ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மகன், கடந்த 2021ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், இரண்டு முறை நீட் தேர்வு (NEET Exam) எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில், மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதுவதற்காக கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (டிச.21) மாலை கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாணவர், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவரின் அலறல் சத்தம் கேட்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு ஓடி வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உளனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'கோச்சிங் சென்டரில் நடத்தப்படும் பயிற்சி தேர்வில் மாணவன் குறைவான மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்றதாக பெற்றோரிடம் மதிப்பெண்களை மாற்றி, கூறி உள்ளார்.
இதனை அறிந்த ஆசிரியர்கள், பெற்றோர் கோச்சிங் சென்டருக்கு நேரில் வரவேண்டும் என மாணவரிடம் கூறியதால் அவர், பெற்றோருக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக்கூடும்" எனத் தெரிவித்தனர். மாணவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக கோச்சிங் சென்டர் மீது மாணவனின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:லீவு உண்டா? இல்லையா?... நெல்லையில் பள்ளி மாணவர்களை குழப்பிய மாவட்ட நிர்வாகம்!