கோவை:பாஜக கோவை மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறை ஏவல் துறையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பவர்கள், தமிழகம் கலவர பூமியாக மாற வேண்டும் என நினைப்பவர்கள் பாஜகவினர் வீடு, உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.
முதலமைச்சர், பாஜகவை மதவாத கட்சி என்கிறார். ஆனால் கலவரம் செய்தவர்கள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. 2 ஜி ஊழல்வாதி பேசியது புதியதல்ல. இதற்கு முன்பும் பேசியுள்ளார். திமுகவிற்கும் இது புதிதல்ல. ஆனால் காலம் மாறிவிட்டது. அரசியல் களம் மாறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. இப்பிரச்சனையை சமாளிக்க மக்களை மறக்கடிக்க அடுத்த பிரச்சனை துவக்க அறிவாயலத்தில் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்தளம் போல ஒருபக்கம் பயங்காரவாதிகள். மறுபக்கம் ஆ.ராசா, காவல்துறை கண்டித்து பாஜகவினர் நின்று கொண்டிருக்கிறோம். பாஜக பொறுமை எந்தளவு இருக்கும்?” என தெரிவித்தார். பெரியார் இறுதிப் பேரூரை என்ற புத்தகத்தில் திமுகவினரை பெரியார் விமர்சித்து பேசியதாக ஒரு கருத்தைக் கூறிய அண்ணாமலை, ”இது நான் சொல்லவில்லை. இது பெரியார் சொன்னது. இதற்கும் ராசா பேச வேண்டும். இது தான் திராவிட மாடல்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பிஎப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகள் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மலப்புரத்தில் சிஆர்பிஎப் கைது செய்தது போல தமிழகத்திலும் நடக்கும். மத்திய அரசிற்கு பவர் இல்லை என நினைக்க வேண்டாம். முதலமைச்சர் சிஆர்பிசி படித்தாரா இல்லையான்னு தெரியாது சிஆர்பிசியில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன். 11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டு உள்ளேன்.
முதலமைச்சர் கடவுள் கிடையாது. கோபாலபுரம் குடும்பத்திற்கு நான்கைந்து அமைச்சர்கள் பாத்திரம் கழுவி கிச்சன் கேபினேட்டில் இருக்கிறார்கள். நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள். முதல்வர் தவறுக்கு விமோசனம் கொடுக்குமாறு கோவில் கோவிலாக நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு சொந்தமான சுயமரியாதை, சமூக நீதியை திமுக ஒட்டி வெட்டியிருப்பது அபத்தத்தின் உச்சம்.
முதலமைச்சரின் அறிக்கை கண்ணாடி முன்பாக அமர்ந்து அவருக்காக எழுதியது போல் உள்ளது. அவர் சொன்னது போல நாங்கள் 15 மாதங்களாக நகர்ந்து செல்கிறோம். அப்படியே இருக்க மாட்டோம். ஆட்சிக்கு வர வேண்டும் என கனவு காண்கிறோம். மது அடிமையில் இருந்து மீட்க, அரசு அலுவலகங்களில் வசூல் செய்வதை நிறுத்த, கனிம வளக் கொள்ளையை தடுக்க ஆட்சிக்கு வர கனவு காண்கிறோம்.