கோவை: தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட மைல்கல் எனும் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கபர்ஸ்தான் எனும் இஸ்லாமியர்களின் மயானம் உள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன்.08) காலை அப்பாதையில் பெரிய கற்கள் போடப்பட்டு தடை செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து இஸ்லாமியர்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அலுவலர்கள் இது குறித்து விசாரித்தபோது, அது வனத்துறைக்கு உள்பட்ட இடம் என்பதால் வனத்துறையினர் அந்தப் பாதையை அடைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இரவோடு இரவாக ஏராளமான கற்களை அப்பாதையில் போட்டு வனத்துறையினர் வழியை அடைத்ததும் தெரிய வந்தது.
சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்த இந்த கபர்ஸ்தானில் கரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய இந்தப் பாதை பயன்படுத்தப்பட்டு வந்தது. கபர்ஸ்தானுக்கு செல்லும் பாதையை சரி செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் மாநகராட்சி அலுவலர்களிடம் முன்னதாக வலியுறுத்தி இருந்தனர்.