தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய் கடித்து உயிருக்கு ஊசலாடிய நாகப்பாம்பு: அறுவை சிகிச்சை வெற்றி! - நாகப்பாம்புவுக்கு அறுவை சிகிச்சை

கோயம்புத்தூர்: நாய் கடித்ததில் படுகாயமடைந்த நாகப்பாம்புவுக்கு இரவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனைக் காப்பாற்றியுள்ளார் வனத் துறை மருத்துவர் அசோகன்.

snake
snake

By

Published : May 13, 2020, 3:30 PM IST

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து ராஜநாகம், மலைப்பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட கொடிய நஞ்சுடைய பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவது வழக்கம்.

அவ்வாறு வீடுகள், தொழிற்சாலைகளில் புகுந்த பாம்புகளை, பாம்பு பிடிக்கும் நபர்கள் வனப்பகுதியில் கொண்டு சென்றுவிடும் பணியை வனத் துறை ஒத்துழைப்போடு செய்துவருகின்றனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரும் வீடுகளில் புகும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் பணியைச் செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 11) இரவு மலுமிச்சம்பட்டி பகுதியில் நுழைந்த நாகப்பாம்பை நாய்கள் கடித்தன

இதில் காயமடைந்த நாகப்பாம்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் சுரேந்தருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு சென்ற அவர், காயமடைந்த பாம்பை மீட்டு வனத் துறை மருத்துவர் அசோகனைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்தார்.

அந்தப் பாம்புடன் டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சுரேந்தரை வருமாறு மருத்துவர் அசோகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தப் பாம்பு அங்கு கொண்டுசெல்லப்பட்டு அதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.

பாம்பை ஆய்வுசெய்யும் மருத்துவர்

அரசு கால்நடை மருத்துவர் தமிழரசு உதவியுடன் பாம்பிற்கு அறுவை சிகிச்சையை வனத் துறை மருத்துவர் அசோகன் மேற்கொண்டார். நாய் கடித்ததில் குடல் பகுதிகள் வெளியே வந்த நிலையில் பாம்புக்கு மயக்க ஊசி செலுத்தி, குடல் பகுதிகள் சரிசெய்யப்பட்டு தையல்போடப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைப் பெற்ற பாம்பு சுரேந்தர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒருசில நாள்களில் இந்தப் பாம்பிற்கு சிகிச்சை முடிந்த பின்னர் வனப்பகுதியில் கொண்டுசென்று விடப்படும் என சுரேந்தர் தெரிவித்தார்.

மேலும், இரவு நேரத்தைக்கூட பாராமல் தான் அழைத்தவுடன் வந்து பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அசோகனுக்கு சுரேந்தர் நன்றி தெரிவித்தார்.

காயமடைந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்

அதுமட்டுமில்லாமல், இதுபோன்று ஏராளமான பாம்புகளை அவர் காப்பாற்றியுள்ளதாகவும் அவரது சேவை பாராட்டுக்குரியது எனவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'மகாராஷ்டிராவுக்கான ஜிஎஸ்டி பங்கை வழங்க வேண்டும்'- பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details