ஆர்டர் செய்த உணவில் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவர், தனது குழந்தையின் உணவுக்காக, கோவையில் உள்ள பிரபல உணவகங்களுள் ஒன்றில் நேற்று (நவ.16) மதியம், பிரபல உணவு டெலிவரி சேவை மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது அவர், காம்போ ஆஃபரில் தயிர் சாதம், சாம்பார் சாதம் அடங்கிய காம்போ மீல் மற்றும் பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார். பின்னர், ஆர்டர் செய்த உணவு வந்தவுடன் அவரும், அவரது குழந்தைகளும் சாப்பிடத் துவங்கி உள்ளனர்.
அப்போது ஆர்டர் செய்திருந்த பேபி கார்ன் பெப்பர் ஃப்ரையில், சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று உள்ளதைக் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து புகார் அளிக்க வீடியோ பதிவு செய்துள்ளார். அதில், தான் கோவையில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்ததாக கூறி இருந்தார்.
மேலும், அவர் குழந்தைகளுக்காக ஆர்டர் செய்த பேபி கார்ன் பெப்பர் ஃப்ரையில் சந்தேகத்திற்குரிய விதத்தில் ஒரு சிறிய பொட்டலம் போன்று ஒன்று இருந்ததாகவும், அது தடை செய்யப்பட்ட குட்காபோல் உள்ளதாகவும், அதை உணவகத்தின் ஊழியர்கள் யாராவது இதில் வீசி இருக்கலாம் என்றும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க:விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ஏர் இந்தியா விமானி! இது முதல் தடவையல்ல?
மேலும், அவர் அதை கவனிக்கும் முன்னரே தனது குழந்தைகளுக்கு ஊட்டி விட்டதாகவும், அதனால் அவரது ஒரு வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். தனது குழந்தைகள் பேபி கார்ன் விரும்பி உண்பார்கள் என்பதனால் தான் ஆர்டர் செய்ததாகவும், அதில் இதைப் போன்று இருந்தது தனக்கு வேதனை அளிப்பதாகவும் கூறி இருந்தார்.
பிரபல உணவகங்களில் இதைப் போன்று அலட்சிய போக்கில் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து உணவு பாதுகாப்புth துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார், ஜாஸ்மின். அதனை அடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக சமயல் அறை மற்றும் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை சோதித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஜாஸ்மின் காவல் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:கேரளா செவிலியருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை.. மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு!