கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே செயின்ட் ஜான்ஸ் என்னும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. சுமார் 820 மாணவ, மாணவிகள் பயின்றுவரும் இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களுடன், காய்கறி விவசாயம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
பள்ளி வளாகத்தில் காய்கறி செடிகள் வளர்க்கும் பொறுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு செடி வழங்கப்பட்டு அதனை வளர்க்கப் பயிற்சி அளிக்கப்படும்.
செடிகளில் வளரும் காய்கறிகளை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதால், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் செடி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். வேளாண்மைப் பிரிவில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருப்பதாகவும் வேளாண்மை பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தப் பள்ளியை பெற்றோர்களும், அப்பகுதி விவசாயிகளும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.