தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் கொள்முதல்; “தமிழ்நாட்டிற்கு வரப்போகும் ஆபத்து” - வானதி சீனிவாசன் - today coimbatore news in tamil

Vanathi Srinivasan: ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல எனவும், இது வரப்போகும் ஆபத்தின் அறிகுறி எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi-srinivasan-statement-about-aavin-dairy-milk-procurement
ஆவின் பால் கொள்முதல்: தமிழ்நாட்டிற்கு வரப்போகும் ஆபத்து .. வானதி சீனிவாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 7:43 AM IST

கோயம்புத்தூர்:ஆவின் பால் கொள்முதல் குறைந்தால் பால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பால் நிறுவனங்கள் விலையை ஏற்றும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம், சராசரியாக தினசரி 29 லட்சத்து 46 ஆயிரம் லிட்டல் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு அக்டோபர் மாதத்தில், 29 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 11-ஆம் தேதி 28 லட்சத்து 35 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத சராசரியைவிட 1 லட்சத்து 11 ஆயிரம் லிட்டர் குறைவாகும். இதனால், பால் கொள்முதலை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தீவிர பால் கொள்முதல் இயக்கத்தை தொடங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என, 27 பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர்களுக்கு, ஆவின் நிர்வாக இயக்குநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது, தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல. இது வரப்போகும் ஆபத்தின் அறிகுறி. ஆவின் பால் கொள்முதல் குறைந்தால், ஆவின் பால் மற்றும் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். விலையும் உயரும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியார் பால் நிறுவனங்கள் விலையை ஏற்றும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

பால் மற்றும் பால் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவை. குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது என்பதால், இதில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆவின் பால் கொள்முதல் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள்தான் பெரும்பாலும் கறவை மாடுகளை வளர்க்கின்றனர். அவர்களை நம்பிதான் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.

ஆனால், மாடுகள் வளர்ப்பு என்பது இப்போது மிகவும் சவாலானதாக மாறிவிட்டது. மாடுகள் வளர்ப்போர் சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் என்பதால், அவர்களுக்கு மேய்ச்சல் நிலம் இருக்காது. முன்பெல்லாம் கிராமங்களில் விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்கள் பெரும் பரப்பில் இருக்கும். அங்கு யார் வேண்டுமானாலும் ஆடு, மாடுகளை மேய்க்கலாம்.

இப்போது கிராமங்களில் தரிசு நிலங்கள் கூட வீட்டுமனைகளாகி விட்டன. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு புறம்போக்கு நிலங்களை மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவனம், வைக்கோல் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், பாலுக்கு மட்டும் நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால் பலர் மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

மானிய விலையில் கறவை மாடுகள் வழங்குதல், கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல், மானிய விலையில் தீவனம், பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஆவின் பால் கொள்முதல் அதிகரிக்கும். மாடுகளை வளர்க்கும் ஏழைகளும் பயன் பெறுவார்கள். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, ஆவின் பால் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெற்ற பிள்ளைகள் நிலத்தை ஏமாற்றியதாக புகார்.. அழுது புரண்டா மூதாட்டியால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details