கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த இரண்டு தினங்களாகக் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவின் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில், இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.300 கோடிக்கும் மேல் அதிகமான பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. பணம் எண்ணும் மெஷின்களே உடையும் அளவிற்குப் பணம் இருக்கின்றது. அவ்வளவு பணத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு பணம் எப்படி ஒருவரின் கையிருப்பில் இருக்க முடியும்? தீரஜ் சாகு தேர்தலில் தோற்றாலும் கூட காங்கிரஸ் கட்சி அவரை ராஜ்ய சபா எம்.பி-யாக்கி உள்ளது. இந்த வருமான வரித்துறை சோதனையில் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி இதுவரை இந்தியா கூட்டணியிலிருந்து எவருமே பேசவில்லை.
எதற்காக இவ்வளவு பணம் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது? இது போன்ற சோதனைகள் நடக்கும் போது, இது அரசியல் ரீதியான பழிவாங்கல் என்றும், வருமானவரித் துறையும், அமலாக்கத் துறையும் மத்திய அரசின் ஏவலாளிகளாக செயல்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
நியாயமான வழியில், சட்டத்திற்கு உட்பட்ட வழியில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் தங்கள் கையில், கட்டுக்கட்டாக இவ்வளவு கோடி ரூபாய்களை வைத்திருப்பதற்கான காரணம் என்ன? இதை மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை நடத்தக்கூடாது எனக் கூறுகிறார்கள்.
மேலும், இது போன்ற சோதனைகள் நடக்கும் போது, அதைத் திசை திருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குவது என்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற கூட்டணி, மோடிக்கு மாற்றான அரசாங்கத்தை எவ்வாறு கொடுக்க முடியும். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து பதிலைக் கூறாமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகவே பாஜக பார்க்கிறது.
சென்னையில் மிக்ஜாம் புயலுக்குப் பிறகு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, மாநில அமைச்சர்கள் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது, இத்தனை கோடி செலவு செய்துள்ளோம் எனக் கூறும் அமைச்சர்களுடன், ஏன் நிலைமை இன்னும் சரியாகவில்லை எனக் கேட்டால், மாற்றி மாற்றிப் பேசி மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, பாஜக சார்பில் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் எனக் கேட்டிருந்தோம். மிக்ஜாம் நிவாரண தொகை ரூபாய் 6 ஆயிரம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த தொகையை ரேஷன் கடைகளில் ரொக்கமாகத் தரும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். வங்கியில் நேரடியாகப் பணத்தைச் செலுத்த வேண்டும்.
இல்லாத ஏழை மக்களைத் திரும்பவும் தெருவில் நிறுத்தாமல், ரேஷன் கடைகளுக்குத் திரும்பவும் அவர்களை அலைக்கழிக்காமல், அவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை ரொக்கமாகத் தராமல், பெண்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும். முதலமைச்சர் இந்த கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!