தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா? - வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜியை துன்புறுத்துகிறார்கள் எனக் கூறும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 16, 2023, 8:45 AM IST

Updated : Jun 16, 2023, 9:45 AM IST

செந்தில் பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா என வானதி சீனிவாசன் கேள்வி

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், காந்திபுரம் ராம் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக அகில இந்திய மகளிர் அணித் தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டின் சூழல் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா தற்போது வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, உடல் நிலை காரணமாக தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.

இந்த கைதுக்கும், விசாரணைக்கும் மாநில அரசை நடத்துபவர்கள், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கண்டன அறிக்கை விடுவது, கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பாஜகவை, பிரதமரை, இதற்கெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சிதான் காரணம் என்ற ரீதியில் மக்கள் முன்பு தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலத்தின் முதலமைச்சர் எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது, பணிய வைக்க முடியாது என கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா, இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா என புரியவில்லை. அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதலமைச்சர் பார்க்கிறார்.

செந்தில் பாலாஜியை துன்புறுத்துகிறார்கள் என கூறும் இவர்கள், அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா? செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்ச நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர்களுடைய கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது, மாநில அரசாங்கத்தின் கடமை.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம். மக்கள் அதனை நம்பப் போவதில்லை.

பாஜக அண்மைக் காலமாக எவ்வளவு ஊழல் நடக்கிறது என கூறிக் கொண்டே வருகிறோம். அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி, தற்போது ஆதாரத்தைக் கொண்டு வந்து காண்பித்த பிறகு அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா என கூறுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் அமலாக்கத் துறையிடம் உள்ளது. அதற்கான பதிலை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்.

நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனபாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வர வேண்டும். குற்றம் செய்பவர்களின் மாமன், மச்சான், மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர்கொள்ள வேண்டுமோ, அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது. தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது, நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. திமுகவினருக்கு சம்பந்தம் இல்லாமல் பொய் பேசுவதுதான் பழக்கம். உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சர் வருவதற்கு முன்பே பாதுகாப்பு குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளும் இனைந்து கூட்டம் ஒன்றை நடத்துவார்கள்.

உள்துறை அமைச்சர் வருகையின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது டெக்னிக்கல் ஃபால்ட் என்று கூறினார்கள். நாங்கள் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று சொன்னோம். கரண்ட் கட் என்பதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை என்றால், இப்போது ஒவ்வோரு நாளும் கரண்ட் கட் செய்ய ஆரம்பித்துள்ளீர்கள்.

DMK பைல்ஸ் அடுத்தது அறிவிக்கப் போகிறோம் என மாநிலத் தலைவர் கூறி இருக்கிறார், அறிவிக்கட்டும் பார்க்கலாம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் கொலுசு, ஹாட் பாக்ஸ் கொடுத்ததை எல்லாம் பார்த்துள்ளோம். தேர்தலின்போது கூட எனது தொகுதியிலேயே திமுகவினர் பணம் கொடுத்தார்கள்.

மத்திய அரசில் இருக்கின்ற ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் துறைகளுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த துறைகள் குறிப்பிட்ட நபர்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் விசாரனை செய்து, அவர்களுக்கு கிடைக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதுதான் அவர்களுடைய நடவடிக்கை. எனவே, இதற்கும், அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சீமான் பேசுகின்ற அத்தனை உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக நாடாக இந்த நாடு உள்ளது. அவர் இதுவரை என்னவெல்லாம் பேசினாரோ, அந்த பேச்சுரிமைக்கு உட்பட்டு அவருக்கு உள்ள உரிமையை அவர் அனுபவித்துக் கொண்டுதான் உள்ளார்.

யார் தவறு செய்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த நாட்டினுடைய சட்டம். அதைத்தான் மத்திய அரசினுடைய துறைகள் செய்கின்றன. பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கூட பாஜக கட்சியினரே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்கள். பணமதிப்பிழப்பு நேரத்தில் தவறு செய்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவில்லை.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள். செந்தில் பாலாஜி முதலமைச்சர் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார். ஏன், முதலமைச்சரின் மனதிற்குள் அவர் போய்விட்டார். முதலமைச்சரையே திட்டியவர் எப்படி அவரது மனதிற்குள் சென்று விட்டார் என்பதை அவரிடம் கேட்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி உயிருக்கு எதேனும் ஏற்பட்டால் அமலாக்கத்துறையே பொறுப்பு - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Last Updated : Jun 16, 2023, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details