கோயம்புத்தூர்தெற்கு தொகுதி 82ஆவது வார்டு வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “மக்கள் சார்ந்த பல்வேறு பணிகளைக் காலையில் இருந்து செய்து வருகிறேன். கணபதி பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அப்பகுதி மக்கள் அங்குள்ள 70வருட பழையான கோயிலை கொடுத்துள்ளார்கள். அதற்கு மாற்று இடமாக காவலர் குடியிருப்பு பகுதியில் 3 சென்ட் நிலத்தை தருவதாக, ஆணையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஆணை வழங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட அறநிலையத் துறை சார்பில் கோயில் கட்டுவதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து கேட்கும்போது பல்வேறு காரணங்களை காட்டி அரசு அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். இதுபோன்று கோயில்களை அரசு எடுக்கின்றபோது அதற்கு மாற்று இடம் கொடுத்து உடனடியாக அந்த இடத்தில் கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், டாடாபாத் பகுதியில் தனிநபர் ஒருவர் அவரது தொழிலுக்காக அங்குள்ள கோயிலை எடுக்க வேண்டும் என மனு அளித்ததன் அடிப்படையில் அந்த கோயிலை அதிகாரிகள் அகற்ற வருகின்றனர். சிவானந்த காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அங்குள்ள கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவதை நான் வரவேற்கிறேன், அதேசமயம் அப்பகுதியில் உள்ள திமுக மன்றம் அரைகுறையாகக் கட்டி அகற்றப்படாமல் இன்னனும் உள்ளது அதனை அகற்றும் படி நான் பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளேன்.
மாநில அரசாங்கம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முதலில் கோயில்களை அகற்றுவதில் தான் உள்ளது. ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்வதைக் கண்டு கொள்வதில்லை. கோவை மாநகராட்சியைப் புறக்கணிக்காமல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளைச் செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கையைத் திரும்பவும் வைக்கிறேன். இந்த மாநகராட்சி நிர்வாகம் கோவையைத் தூய்மைப்படுத்துவதற்காக முதற்கட்ட முயற்சியாக மேம்பால தூண்களில் அழகான சித்திரங்கள் வரையும் முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
சென்னையிலும் மேம்பாலத் தூண்களில் தமிழர்களின் பெருமையைச் சாற்றும் அழகான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அதனை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அதுபோன்ற ஒரு முயற்சியைக் கோவை மாநகராட்சியும் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்தில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் ஒரு சமுதாயத்தைப் பற்றி தவறான செய்தி வந்திருக்கிறது என்ற காரணத்தினால், அப்பகுதியில் உள்ள அனைத்து சித்திரங்களையும் அழிப்பது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் ஈடுபடும் நபர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும்.