கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி, நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு பாஜக சார்பில் நடைபெற்றது.
இதில் கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு பாஜக இளைஞரணித் தலைவர் வினோத் செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
ரிவால்டோ யானையை விடுவிக்க வேண்டும்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், "கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே குடும்பத்தினர் மட்டும் பணியாற்றும் நகை பட்டறைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
நிவாரணப் பொருள்கள் வழங்கிய வானதி வனத்துறை பிடித்து வைத்திருக்கும் ரிவால்டோ யானையை நிபுணர்களின் கருத்தை கேட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் தற்போது ஆன்லைன் வாயிலாக வகுப்புகளில் பங்கேற்பதால் மின்தடையை குறைக்க வழி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
மின்தடையும் அணிலும்
மேலும் பேசிய அவர், "மாவட்டத்தில் ஏற்படும் மின்தடையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. திமுக என்றும் தனது இயலாமையை ஏற்றுக்கொள்ளாமல் பிறர் மீது பழி சுமத்திவருகிறது. தற்பொழுது கூட திமுக அரசு மின்வெட்டுக்கு அணில் மீது பழி சுமத்தியுள்ளது.
ராமாயண காலத்தில் அணிலுக்கு கூட ராமபிரான் பெருமையை சேர்த்தார். ஆனால் திமுகவினர் அணிலின் மீது பழி சுமத்தி உள்ளனர். எனவே திமுக தனது தவறைத் திருத்திக் கொண்டு தடையில்லா மின்சாரத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?'