கோயம்புத்தூர்:மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று (செப் 19) மக்களவையில் தாக்கலானதை முன்னிட்டு கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பாஜக நிர்வாகிகளுக்கு, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறுகையில், "கூட்டத்தொடரின் முதல் நாளில் மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெறுவதற்கு நீண்ட நாட்களாக பல முயற்சிகள் பெறப்பட்டிருந்தது.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயம் பெண்களை உள்ளடக்கியதாக முழுமையானதாக மாற ஒவ்வொரு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு அவசியம். பெண்களின் நலனை முன்னிறுத்தி தான் பெரும்பாலான திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு இருக்கிறது. குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பல்வேறு பலன்களை அடைய நடவடிக்கை எடுத்தவர் மோடி.
சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் ஆய்வு கூட உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மை மாநிலங்கள் 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக பங்களிப்பு மாறி கொண்டு இருக்கின்றது என்பதை சொல்லி இருக்கின்றது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்து ஒரு மனதாக இந்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த மசோதாவை பற்றி அரசியல் ரீதியாக விமர்சிப்பதை, விட்டுவிட்டு முழுமையாக பரிபூரண மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலைப் பற்றி பேசும் கனிமொழி, 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கட்சி தீர்மானம் போட்டு இருக்கிறார்கள்.