தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது” அமைச்சர் எல்.முருகன் கடும் தாக்கு!

Union Minister L Murugan: கோவை - பொள்ளாச்சி முன்பதிவில்லா விரைவு ரயில் துவக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது. அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார். அரசியலில் அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Union Minister L Murugan criticize Minister Udhayanidhi Stalin at Coimbatore to Pollachi train inaugural function
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 7:32 PM IST

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

கோயம்புத்தூர்: கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று (டிச.24) நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “இந்த ரயில் சேவை குறித்த மனு, கடந்த நவம்பர் மாதம் அளிக்கப்பட்டதாகவும், உடனடியாக ரயில்வே துறை அமைச்சரிடம் இது குறித்துப் பேசி ஒரே மாதத்திற்குள் இந்த ரயில் இயக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்-க்கு கோவை மக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். தமிழகத்தில் ரயில்வே துறையின் வளர்ச்சி அபரிவிதமான ஒன்று. 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இருந்த மத்திய அரசு 5 ஆண்டுக்கு ஒதுக்கிய நிதி வெறும் 876 கோடி தான் ஒதுக்கப்பட்டது எனவும், ஆனால் இந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 1,861 கோடி ரூபாய் ரயில் நிலையங்கள் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திற்கு 113 கோடி, மதுரைக்கு 413 கோடி, காட்பாடிக்கு 461 கோடி, சென்னை எழும்பூருக்கு 840 கோடி, கன்னியாகுமரிக்கு 67 கோடி, கோவை வடக்கு ரயில்வேக்கு 11 கோடி, போத்தனூர் ரயில்வே நிலையத்திற்கு 18 கோடி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு 12 கோடி, ஊட்டி - குன்னூர் 20 கோடி ரூபாய், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையிலான தண்டவாள பணிகளுக்கு 10 கோடி, தேனி - மதுரை ரயில் பாதைக்கு 500 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாயில் 9 ரயில் பாதைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வந்தே பாரத் ரயில் மூலம் ஆறு மணி நேரத்தில் கோவையிலிருந்து சென்னைக்குச் செல்லலாம் என தெரிவித்த அவர், வருகின்ற 30ஆம் தேதி கோவையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அதிக வேகத்துடனும் மிகுந்த பாதுகாப்புத் திறனுடனும் இருக்கும் வந்தே பாரத் ரயில் அதிகமாக நமது பகுதிக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொழில்துறை நிறைந்த இந்த பகுதிக்கு அதிகமான கவனம் செலுத்தி ரயில்களை அதிகப்படியாக இயக்கி வருவதாகவும்” தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி கிடையாது. அவர் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார். அரசியலில் அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொண்டு மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசுக்கு வேலை செய்யும் பொழுது தமிழக அரசுக்குத் தான் நல்ல பலன் கிடைக்கும். அதை விட்டு உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசி அமைச்சருக்கான தராதரத்தைக் குறைத்துவிட்டார் என்று தான் கருதுவேன் என தெரிவித்தார்.

எந்த இயற்கை பேரிடர் என்றாலும் முதலில் நிற்பது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான். அது எங்களுடைய பாரம்பரியத்திலேயே இருக்கிறது. கேள்வி கேட்ட பிறகு களத்தில் சென்ற நிற்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் பிரச்சனை வரும் என்பதை அறிந்து முன்கூட்டியே செயல்படுவது பாஜக என்றார்.

மத்திய அரசின் அனைத்து மீட்புக் குழுக்களும் பேரிடரின் போது அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது. அதேபோல் பொதுவாகப் பேரிடர் ஆய்வு செய்ய வரும் மத்திய அரசு குழு ஒரு வாரத்திற்குப் பிறகு தான் வருவார்கள், இப்போது உடனடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை - பொள்ளாச்சி புதிய ரயில்..! அமைச்சர் எல்.முருகன் துவங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details