தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்கின்றனர்" - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விளாசல்! - kovai news

எதிர்கட்சியினரால் யார் பிரதமர் வேட்பாளர் எனவும், கூட்டணிக்கு யார் தலைவர் என்பதையும் தீர்மானிக்க முடியவில்லை அவர்கள் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கடுமையாக சாடியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 28, 2023, 7:51 AM IST

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பு

கோவை: மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பல்வேறு அணிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய வானதி சீனிவாசன் "பாஜகவின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அணிகளுக்கும் பொறுப்புகளை வழங்கி இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், இப்பணிகள் கட்சியை வலுப்படுத்த உதவும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், "பாஜகவின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து உறுதியாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

பின்னர், விழா மேடையில் சிறப்புரையாற்றிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, "பிரதமர் ஒவ்வொரு உரையிலும் தமிழர்களை, தமிழர்களின் பெருமைகளை விளக்கும் விதமாக தமிழக கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, தமிழ் மொழியினை பாராட்டும் விதமாக அனைத்து நிகழ்வுகளிலும் உரையாற்றி வருகிறார். பாஜகவின் இன்றைய தலைவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பல்வேறு அணிகளில் நிர்வாகிகளாக பணியாற்றினர். அதில் சிறப்பாக பணியாற்றியதால் இன்று கட்சி தலைவர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

பாஜகவின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி கட்சியில் உயர்ந்த பதவிகளை பெற வேண்டும். மேலும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் சாதனைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் எடுத்துச் சென்று புதிய வாக்காளர்களையும், புதிய உறுப்பினர்களையும் பாரதிய ஜனதா கட்சி வசம் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் நடந்து வரும் குடும்ப அரசியலை நீக்கும் விதமாக பாஜக அணியினர் கடுமையாக உழைத்து மக்கள் வளர்ச்சிக்காக பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "

மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறோம். தமிழகத்தில் பாஜகவுக்கு வரவேற்பும், ஆதரவும் அதிகரித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் துவங்கியுள்ளனர். ஆளும் திமுக குடும்ப ஊழல் ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைய மக்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை ஒவ்வொரு நபரிடமும் எடுத்துச் சென்று வருகிறோம். தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பீகாரில் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை. அதனால் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தியாவின் அனைத்து ஊழல் கட்சிகளும் குடும்பக் கட்சிகளும் சேர்ந்து எங்களை எதிர்க்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் ஒற்றுமையாக நிற்க முடியாது. தற்காலிக பலனுக்காக மட்டுமே அவர்கள் இந்த ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர். இவர்களால் ஒற்றை தலைமையிலான பிரதமர் வேட்பாளரின் கீழ் பணி செய்ய முடியாது.

எதிர்க்கட்சியினரால் யார் பிரதமர் வேட்பாளர் எனவும், கூட்டணிக்கு யார் தலைவர் என்பதையும் தீர்மானிக்க முடியவில்லை. இவர்கள் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறுவார்கள். இந்தியா பல்வேறு விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய சிறப்பான தலைமையை கொண்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினரால் முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே கடையை எத்தனை தடவ மூடுவீங்க? - கோவை டாஸ்மாக் கடையால் குழப்பம்

ABOUT THE AUTHOR

...view details