ஒரே நாளில் அடுத்தடுத்து 5 இடங்களில் செயின் பறிப்பு... வழிப்பறி குருவிகள் சிக்கியது எப்படி? கோயம்புத்தூர்: கோவை ராம்நகர் பகுதியில் கடந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த பிரசாந்த் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய 2 மர்ம நபர்கள் 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதுமட்டுமின்றி அதே நாளில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் கோவை மாநகர் மற்றும் மாநகர எல்லை பகுதியில் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (23), பார்த்தீபன் (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனம், லேப்டாப், 54 கிராம் எடையுள்ள 3 செயின்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு காட்டூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சந்தீஸ், "கடந்த மாதம் 25ஆம் தேதி தொடர்ச்சியாக 5 இடங்களில் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவம் நடைபெற்றது. அதில் இரண்டு வாகனம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டு இருந்தது.
முகமூடி அணிந்து 7 இடங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று இருந்தது. காட்டூர் காவல் நிலையம், ஆர்.எஸ்.புரம், மதுக்கரை, கோவில்பாளையம் , சுந்தராபுரம், சரவணம்பட்டி காவல் எல்லைகளில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய 10 பேர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 150 சிசிடிவி கேமரா காட்சிகள் எடுக்கப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தினேஷ், பார்த்திபன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. தனிப்பட்ட செலவுகளுக்காக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுபோல இளம் வயதினர் குற்ற வழக்கில் ஈடுபடாமல் இருக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து கஞ்சா மற்றும் மது போதையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. 'நம்ம கோவை நம்ம பாதுகாப்பு’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகிறோம். 120 சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட்ட உள்ளோம். 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது தியேட்டர் உரிமையாளர்களிடம், வரக்கூடிய வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். திரைப்பட கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்துக் கொலை.. காலணியை வைத்து கொலையாளியை கைது செய்த போலீஸ்!