தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசு அனுமதி: டிடிவி கண்டனம்!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு பழனிசாமி அரசு தடை விதிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

By

Published : May 12, 2019, 2:06 PM IST

File pic

இது குறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

மக்களின் எதிர்ப்பை மீறி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்துவருகிறது. அதில் ஒரு படுபாதக செயலாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடந்த ஆண்டு வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் சுற்றுச்சூழலை நாசமாக்கி, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை நரகமாக்கி உள்ள வேதாந்தா நிறுவனத்தைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின் இந்தச் செயல்பாட்டுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இப்போது விழுப்புரம் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் வங்கக்கடலோரம் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி அளித்துள்ளார்கள்.

இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய ஆட்சியாளர்கள் திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டை மொத்தமாக அடகு வைத்திருக்கும் பழனிசாமி அரசு, இதனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

‘வேதாந்தா நிறுவனத்தின் இந்த எரிவாயு கிணறு திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது’ என புதுச்சேரி அரசு திட்டவட்டமாக அறிவித்திருப்பதைப் போல பழனிசாமி அரசும் அறிவிக்க வேண்டும்.

வேதாந்தா மட்டுமல்ல; எந்த நிறுவனமும் தமிழ்நாட்டை அழிக்க முனையும் இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்களை அழிக்கும் இத்தகைய திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கடுமையாக எதிர்க்கும். நாங்கள் எப்போதும் மக்களின் பக்கம் நின்று செயல்படுவோம்' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details