கோவை:சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுக சார்பில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (அக்.21) நடைபெற்றது.
துரியோதனன் போல் பேசி திரியும் ஈபிஎஸ் தோற்பது உறுதி:இந்த நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், 'முறைகேடுகளால் சம்பாதித்த பணத்தையும் துரோகத்தை மூலதனமாகக் கொண்டு செயல்பட்டதால், அம்மாவின் இயக்கம் செயலிழந்த நிலைக்கு சென்றுவிட்டது எனவும்; அதிமுகவை மீட்டெடுக்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது எனவும், துரியோதனன் போல் பேசி திரியும் எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி வருங்காலத்தில் உறுதியானது எனவும் தெரிவித்தார்.
மக்கள் விரோத போக்கில் திமுக ஆட்சி:மேலும், மக்கள் எடப்பாடி கே.பழனிசாமி மீதிருந்த கோபத்தால் திமுகவிற்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்திருப்பதாக தெரிவித்த டிடிவி தினகரன், நீட் தேர்வு முதல் திமுக கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமால்; அதற்கு மாறாக, செயல்பட்டு கொண்டிருக்கிறது என சாடினார். இதனால், மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக என்றைக்கும் திருந்தாது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என கூறினார்.
இரட்டை இலையை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது:மேலும், இரட்டை இலையை பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலையை காட்டி இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் உணர்த்தும் எனவும் தெரிவித்தார். அதற்கு இத்தேர்தல் நல்ல தொடக்கமாக இருக்கும் எனவும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் ஆட்சியை அமமுக அமைத்திட உழைக்க வேண்டும்' எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேவர் ஜெயந்தி விவகாரத்தில் ஈபிஎஸின் நிலைப்பாடு: பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், ' 'தேவர் குருபூஜை'க்கு (Thevar Jayanthi) எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டு செல்வதாக கூறியுள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, இதற்கு முன் ஏன் செல்லவில்லை என எடப்பாடி பழனிசாமியை தான் கேட்க வேண்டும் என்றார். 2021 தேர்தலில் குறிப்பாக, வட தமிழகத்து மக்களை ஏமாற்றுவதற்காக அவர், வன்னியர்களை ஏமாற்றுவதற்காக 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அறிவித்தார்' என குற்றம்சாட்டினார்.
வன்னியர் இட ஒதுக்கீட்டால் பிற சமூகத்தினரின் எதிர்ப்பை பெற்ற ஈபிஎஸ்:நீதிமன்றத்திற்கு சென்றால் நிற்காது என தெரிந்தும், 4 ஆண்டு கால ஆட்சியில் எதுவும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும்போது, 10.5 சதவீத இட ஒதுக்கீடு (vanniyar 10.5 reservation) என வன்னியர்களை ஏமாற்ற அறிவித்தார். இதனால், 109 சமுதாய மக்கள் உள் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவோம் என்பதால் உள் ஒதுக்கீடுக்கு எதிராக மாறினார்கள்.