சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரி பயின்றோர் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 46 சுங்கச்சாவடிகளில் அருகே ’விதை’ என்ற பெயரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதால், காலநிலை மாறுபாடு, காற்று மாசு அடைவது ஆகியவை ஏற்படுகிறது. இதனால் எங்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மரங்கள் நட்டு பராமரித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகப் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.