தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தின் (TNPID) சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி கரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய அவர், கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாசுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''கரோனா காலத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மட்டும் நான் நன்றி கூறவில்லை. மற்ற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சரியான ஆலோசனைகள், ஊக்குவிப்பு, அரவணைப்பு ஆகியவற்றுக்கும் சேர்த்தே நன்றி தெரிவிக்கிறேன்.
நீதிபதி ரவி அரசு மருத்துவமனைக்கு எழுதிய கடிதம் சரியான நேரத்தில் இங்கு அளிக்கப்படும் ஊசி, மருந்து, மாத்திரைகள் நோயாளிகள் விரைவில் நலம் பெற உதவுகின்றன. சிறந்த நிர்வாகம், உயர்தர மருந்துகள், சுகாதாரமான சூழல், ஊட்டச்சத்துமிக்க உணவு என தனியார் மருத்துவமனைகளைவிடவும் இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு பணி பாராட்டுக்குரியது. கரோனாவால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும், அவர்கள் பணியாற்றுவது போற்றுதலுக்குரியது. எனவே, அரசு அவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றை இரட்டிப்பாக்கி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்'' என பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வறுமையால் வாய்ப்பிழந்த மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய அரசு