கோயம்புத்தூர்: மின் கட்டண உயர்வால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் நடைபெற்ற, ‘தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில்’ தொழில் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் தொழில் துறையினர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகம் தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் தொழில்வளர்ச்சியை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்வதிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில்,பொருளாதார மந்த நிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து, தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. மின் கட்டண உயர்வால் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 15 சதவீத சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், வருடந்தோறும் ஒரு சதவீத மட்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். கட்டட மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரியஒளி மின்உற்பத்தி திட்டங்களுக்கு நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள், தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர்.
இக்கோரிக்கைகளுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கவும், விரைவில் முதலமைச்சரை நேரில் சந்திக்கவும் முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள 165 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கியுள்ளோம்.
மேலும், பலமுறை தமிழக முதலமைச்சரை மின் கட்டணம் தொடர்பாக அமைச்சர்கள் மூலமாக சந்திக்க முயற்சி செய்தும் தொழில்துறையினரை சந்திக்க முதலமைச்சர் தயக்கம் காட்டுகிறார். முன்னாள் மின் துறை அமைச்சர், தற்போதைய மின் துறை அமைச்சர் மற்றும் கோவைக்கான பொறுப்பு அமைச்சர் உள்ளிட்டோரை பலமுறை சந்தித்தும் பலனில்லாத சூழலில் மீண்டும் ஒருமுறை முதலமைச்சரை சந்திக்க முயற்சி செய்வதாகவும், முதலமைச்சர் சந்திக்க மறுத்தால் அதன் பிறகு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Chennai Crime: கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய ஓலா டிரைவர்... அண்ணன் கொலைக்கு காத்திருந்து பழி வாங்கிய தம்பி!