கோயம்புத்தூர்: அரசாணை 293-ஐ (Health and Family Welfare) உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ள Allowance மற்றும் Increments ஆகியவற்றை அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில், இன்று (ஆகஸ்ட் 28) மாநிலம் தழுவிய உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உள்ளிருப்பு போராட்டம் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இந்த தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கோவை மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமை வகிக்கிறார். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள், கரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் பணியாற்றிய தங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அரசாணையை வெளியிட்டார் என தெரிவிக்கின்றனர்.