தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: கேரளாவுடன் தமிழக விவசாயிகள் ஆலோசனை..! - tn forest department

Wild Boars: கேரள மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக் கொல்லுவதற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் குழு ஒன்று கேரள மாநில வன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கேரள வனத்துறையினருடன் தமிழக விவசாயிகள் ஆலோசனை
கேரள வனத்துறையினருடன் தமிழக விவசாயிகள் ஆலோசனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 8:08 PM IST

கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குறிப்பாகக் கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிர்கள் சேதமாகி வருவதனால் நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையிடம் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். யானைகளால் ஒரு சில இடங்களில் மட்டும் சேதம் ஏற்பட்டாலும், காட்டுப் பன்றிகளால் அதிகளவிலான சேதங்கள் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

குறிப்பாகக் கோவை வனக் கோட்டத்தில் தடாகம், பெரிய நாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் நாள்தோறும் விவசாய பயிர்கள் சேதமாவதால் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்தக் கோரி மனுக்களை அளித்தும் அடையாள ஆர்ப்பாட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், கேரள மாநிலத்தில் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டிலும் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் விவசாயிகள் சார்பில் ஒருவர் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டு அக்குழுவினர் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்குழுவினர் கேரள மாநிலம் பாலக்காடு சென்று அம்மாநில அரசு காட்டுப் பன்றிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தும், அம்மாநில வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் இக்குழு கேரள மாநிலம் பாலக்காடு சென்றது. வனத்துறை உயர் அதிகாரிகள், குழு உறுப்பினர்களான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

அங்குக் காட்டுப் பன்றிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றனர் என்பதை தமிழ்நாடு விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காட்டுப் பன்றிகளால் அதிக சேதம் ஏற்படும் பகுதிகளில் அந்தந்த ஊராட்சிகளே அனுமதி பெற்ற துப்பாக்கி சுடும் வல்லுநர்களைக் கொண்டு காட்டுப் பன்றிகளைச் சுட்டு வருகின்றனர். இந்த முறை இந்த அறிவிப்பு அங்குள்ள விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது. அதே போன்றே தமிழ்நாட்டிலும் செயல்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி பெரியசாமி கூறுகையில், "கேரள மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் விளை நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொள்ள அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அந்த நடைமுறை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அது தவிர்த்து ஆரம்பத்தில் வனத்துறை காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொன்று வந்த நிலையில், தற்போது அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கிராம ஊராட்சியே துப்பாக்கிச் சூடும் நபர்களை வைத்துக் காட்டுப் பன்றிகளைச் சூட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி விவசாய நிலங்களில் பயிர் சேதம் குறைந்துள்ளது. அந்த நடைமுறை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு அதிக நன்மை ஏற்படும். காட்டுப் பன்றிகளால் அதிக அளவில் சேதங்களைச் சந்தித்து வருகின்றோம். கேரள மாநிலத்தில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தால், அதிக இழப்பீடுகள் வழங்கி வரும் நிலையில் அதே போன்று தமிழ்நாட்டிலும் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தால் அதிக இழப்பீடு தர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:திமுக இளைஞரணி மாநில மாநாடு தேதி மாற்றம் - திமுக தலைமை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details